100 ஏக்கர் நிலப்பரப்பில் எம்.ஜி.ஆர். திரைப்பட தளம் அமைப்பு..!

412

சென்னையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு திரைப்பட தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு திரைப்பட தளம், சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு தளத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அவரை ஆர்.கே.செல்வமணி, விக்ரமன் உள்ளிட்ட திரையுலகினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திரைப்பட தளமானது தமிழக திரைப்படத்துறையினர் மட்டுமின்றி மாற்று மொழி திரைப்படத்துறையினரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சார்பில் இந்த படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.