மெக்சிகோ இரவு கேளிக்கை விடுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு. அமெரிக்கர் உட்பட 6 பேர் உயிரிழப்பு, 4 பேரை கைது செய்து விசாரணை.

233

மெக்சிகோவில் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் இசை விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், அமெரிக்காவைச்சேர்ந்தவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள புளு பேரட் கிளப்பில் சர்வதேச எலக்டிரானிக் இசை நிகழ்ச்சி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் உள்ளுர், வெளிநாட்டவர் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், கிளப்பில் புகுந்த மர்மநபர் ஒருவர் திடீரென, அங்கிருந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் அமெரிக்கர் உட்பட கனடா நாட்டை சேர்ந்த இரண்டு பேர்,கொலம்பியா நாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் இத்தாலியை சேர்ந்த ஒருவர் என 5 பேர் உயிரிழந்ததாக மெக்சிகோ நாட்டு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவ இடத்தை விட்டு வெளியேற முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். காயமடைந்த 15 பேரில், பத்து பேர் மருத்தவமனையில் சிகிச்சைஅ பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து, துப்பாக்கியால் சுட்ட மர்மநபரை தேடி வருகின்றனர். சுற்றுலா பயணிகளுக்குள் ஏற்பட்ட தகராறு இதற்கு காரணம் என்றும், தீவிரவாத தாக்குதல் எதுவும் இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.