மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது..!

191

நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது. மேலும், விரைவில் 100 அடியை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல், கர்நாடக கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் மளமளவென நிரம்பியது. கடந்த ஒரு வாரமாக 30 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்ட வந்த நிலையில், அணைகளின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டது. இதனையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், நேற்று இரு அணைகளில் இருந்து 1 லட்சத்து 15 ஆயிரத்து 277 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக, ஒகேனக்கல் அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்ணவாடி, கோவிந்தபாடி, கருங்கல்லூர் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.