100feet

மேட்டூர் அணையின்நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ள நிலையில், நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், மூன்று நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 19ம் தேதி மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுவதால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவிகளில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி இருப்பதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை 3 நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா பாசனத்துக்காக நாளை மறுநாள் தண்ணீர் திறந்து விடப்பட இருப்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 19ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி நேரில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.