டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு

185

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவிடுகிறார்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் வருவதால், ஒகேனகல்லில் அருவிகளை மூழ்கடிக்கும் அளவு வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனிடையே மேட்டூர் அணையின் நீர்வரத்தும் அதிகரித்துள்ளதால், அதன் நீர்மட்டம் நேற்று 105 அடியை தாண்டியது. இதையடுத்து டெல்டா பாசனத்திற்கு இன்றுமுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தண்ணீரை திறந்துவிடுகிறார். இதையொட்டி, நேற்று மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ செம்மலை, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.