ஜூலை 19 – மேட்டூர் அணை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்…

72

மேட்டூர் அணையிலிருந்து ஜூலை 19ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நெல் ரகங்களையும், ரசாயன உரங்களையும் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும் என்று அவர் ஆணையிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.18 அடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அணைக்கு நீர்வரத்து 99 ஆயிரத்து 372 கன அடியாகவும், நீர் இருப்பு 51.72 டி.எம்.சியாகவும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் நீர் தேவையை கருத்தில் கொண்டு 19-ம் தேதி முதல் மேட்டூம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
காவிரி மற்றும் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் சாகுபடி பணி மேற்கொள்ளப்படுவதோடு, நிலத்தடி நீர் உயர்ந்து, குடிநீர் தேவைக்கும் பயன்படும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நெல் ரகங்களையும், ரசாயன உரங்களையும் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர்,மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரை, கால்வாய்கள், தடுப்பணைகள் மூலம் நீர் மேலாண்மை செய்து விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.