மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரிப்பு..!

490

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு, ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

நீர்வரத்து இதேநிலையில் தொடர்ந்தால், அணையின் நீர் மட்டம் உயர்ந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். கர்நாடகாவில் பெய்து வரும் வரும் கனமழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து 25,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பரிசில்கள் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.