1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் : 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

466

மேட்டூர் அணை 2 வது முறையாக 120 அடியை எட்டியதால் 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து கடந்த மாதம் 23ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. நீர் வரத்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வந்ததால் உபரி நீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டது. பினனர் கடந்த 31 ம் தேதி நீர் வரத்து குறைந்து உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்து. இந்நிலையில் நேற்று முதல் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை 2 வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 40 வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையிலிருந்து 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோரத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு மேட்டூர் அணை 5 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வழியாக கடலூர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்படுவதால், ஏரியின் நீர்மட்டம் 46.7 அடியை எட்டி உள்ளது. இதனால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக குழாய் மூலம் 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியும் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் சென்னைக்கான நீர்திறப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் சிற்றாறு அணை 16 அடியை தாண்டியது. இதனால் அணையிலிருந்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.