mettur

காவிரி டெல்டா பாசனத்திற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்ததால், அணையில் நீர்மட்டம் தற்போது 109 அடியை எட்டி வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 77 டிஎம்சியாக உள்ளது.இந்த நிலையில், டெல்டா பாசனத்திற்காக, அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தார். இதனையடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இரவுக்குள் இது 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும். மேட்டூர் அணை கட்டிய 84 ஆண்டுகளில், டெல்டா பாசனத்திற்காக, மாநில முதலமைச்சரே நீரை திறந்து விடுவது இதுவே முதல்முறையாகும். இந்த தண்ணீரை பயன்படுத்தி, டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். குறுவை ,சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, டாக்டர் சரோஜா, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, ஆட்சியர் ரோகிணி உள்பட அரசு அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.