தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!

126

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சதம் அடித்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, தேனி, கமுதி, பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உதகை, கொடைக்கானல் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இந்தநிலையில், உள்கர்நாடகா முதல் கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென் தமிழகத்தில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை சூறை காற்றுடன் மழை பெய்ய உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.