தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

311

தென் மேற்கு பருவமழை வருவதை அடுத்து தமிழகத்தின் குமரி, கோவை, தேனி, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெப்பச்சலனம் காரணமாக ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருவதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், தென் தமிழக பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.