மேலூர் அருகே லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். 4 பெண்கள் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து மதுரை வழியாக திருநெல்வேலி வரை செல்லும் அரசுப் பேருந்து நேற்று இரவு கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டது. அதிகாலை 4-30 மணியளவில் மேலூர் அருகே தெக்குப்பட்டி என்ற இடத்தின் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த மணல் லாரியின் பின்புறம் பேருந்து மோதியது. இதனால் பேருந்தின் முன்புறம் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் மற்றும் 4 பெண்கள் உட்பட 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த மேலூர் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பேருந்து ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.