மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 70 சதவீத இடங்கள் கிடைக்க வாய்ப்பு – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

119

மருத்துவப் படிப்புகளுக்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 70 சதவீத இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.எடி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேற்று தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற கலந்தாய்வில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினர் கலந்துகொண்டனர். இந்தநிலையில், மருத்துவப் படிப்புகளுக்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தரவரிசைப் பட்டியலில் ஒன்று முதல் 597 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதையடுத்து, முதல் 10 மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டு ஆணைகளை அவர் வழங்கினார். அப்போது, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 70 சதவீத இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.