எம்பிபிஎஸ் சீட் மோசடி வழக்கில் பாரிவேந்தர் சென்னை புழல் சிறையில் அடைப்பு. செப்டம்பர் 9ஆம் தேதி வரை காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு.

219

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க 72 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கில், பாரிவேந்தரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்ஆர்எம் மருத்துக்கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாகக்கூறி பணம் வசூலித்து 72 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டதாக மதன் மீது புகார்கள் குவிந்தன. இதன் அடிப்படையில்
மதன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பெயரும் சேர்க்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என கேள்வி எழுப்பியது.
இதையடுத்து, மாணவர் சேர்க்கை தொடர்பாக பச்சமுத்துவிடம் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர், அவரை நேற்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, பாரிவேந்தருக்கு இதயவலி ஏற்பட்டதால், உடனடியாக அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர், அவரை போலீஸார் நேற்று இரவு எட்டரை மணியளவில் சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் 11-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் பாரிவேந்தரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது பாரிவேந்தர் சார்பில் வாதாடிய அவரது வழக்கறிஞர் அன்பழகன், இந்த வழக்கில் பாரிவேந்தருக்கு தொடர்பு இல்லை என்றும், அவரை கைது செய்தது தவறு என்றும் வாதாடினார். தொடர்ந்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் இம்மானுவேல், சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்புள்ளதால், பாரிவேந்தரை விடுவிக்கக்கூடாது என்றார். இதனையடுத்து, வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வரை பாரிவேந்தரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பாரிவேந்தர் சார்பில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே, பாரிவேந்தர் கைது செய்யப்பட்டதால், ஐ.ஜே.கே.தொண்டர்கள் நள்ளிரவு 12 மணியளவில் சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க நீதிபதி பரிந்துரை செய்ததை அடுத்து, பாரிவேந்தர் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.