மாயமான விமானத்தை தேடும் பணிக்காக மேலும் இரண்டு அதிநவீன கப்பல்கள் வரவழைப்பு. இந்திய கடலோரப்படை அதிகாரிகள் தகவல்

254

மாயமான விமானத்தை தேடும் பணிக்காக மேலும் இரண்டு அதிநவீன கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கடலோரப்படை தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து 29 பேருடன் மாயமான விமானத்தை தேடும் பணி எட்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், விமானம் குறித்த எந்த தகவலும் இது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில், இது குறித்து மாநிலங்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், மோசமான வானிலை காரணமாக விமானம் மாயமாகியிருப்பதாக தெரிவித்தார். காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்க எல்லா வித முயற்சிகளும் எடுத்துவருவதாக கூறிய அவர், அமெரிக்காவின் உதவியை நாடி உள்ளதாகவும் கூறினார். விமானம் மாயமானது குறித்து பாதுகாப்புத்துறை நிபுணர்களிடம் தாம் பேசியதாக கூறிய பாரிக்கர், 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானம் வேகமாக கீழே இறங்கியிருப்பதாக அவர்கள் கூறியதை சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, விமானத்தை தேடும் பணிக்காக மேலும் இரண்டு அதிநவீன கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கடலோரப்படை தெரிவித்துள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் அதிநவீன கப்பலான சமுத்திர ரத்னாகர் பெங்களுரூவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்றொரு அதிநவீன கப்பலான ஐ.என்.எஸ். நிரூபக் ஆழ்கடலில் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கடலோரப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம், மாயமான விமானத்தின் பாகங்கள் கடலில் மிதக்கிறதா என்பது குறித்து கடலோர காவல்படையினர் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.