மாயாவதி பற்றி பேசிய பா.ஜ. தலைவர் நாக்கை அறுத்தால் ரூ.50 லட்சம்! பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் எச்சரிக்கை!!

200

சண்டிகர், ஜூலை. 22–
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சனம் செய்த தயாசங்கர் சிங்கின் நாவினை அறுத்துக் கொண்டு வருவோருக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அக்கட்சியைச் சேர்ந்த பெண் தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.
மாயாவதி குறித்து உத்தரப் பிரதேச பாஜக துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங்
அவதூறாகப் பேசியதைக் கண்டித்து சண்டீகரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் உள்ளூர் தலைவர் ஜன்னத் ஜஹான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
எங்கள் கட்சித் தலைவர் மாயாவதி குறித்து தயாசங்கர் சிங் தரக்குறைவாக பேசியிருப்பது பாஜகவின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது. தயாசங்கரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
பெண்களை இழிவுபடுத்திய தயாசங்கரின் நாவினை அறுத்துக் கொண்டு வருவோருக்கு ரூ.50 லட்சத்தை நான் சன்மானமாக வழங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாயாவதி கருத்து
இதனிடையே, தயாசங்கர் சிங் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: என்னைப் பற்றி அவதூறாகப் பேசிய தயாசங்கர் சிங்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக தெரியவருகிறது. இது போதுமான நடவடிக்கை கிடையாது. அவர் மீது பாஜகவே வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் என மாயாவதி தெரிவித்தார்.