மே 12-ல், 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கர்நாடக சட்டசபை தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் ..!

503

கர்நாடக சட்டமன்ற தேர்தல், 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வரும் மே 12-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 28-ம் தேதி முடிவடைவதாக தெரிவித்தார்.
4 கோடியே 96 லட்சம் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், 56 ஆயிரத்து 696 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறினார்.
ஏப்ரல் 17ஆம் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்குவதாக கூறிய அவர், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ஏப்ரல் 24ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.
வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 27ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மே 12ஆம் தேதி ஒரே கட்டமாக, 224 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறிய ஓ.பி.ராவத், தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 15ஆம் தேதி எண்ணப்படும் என்று தெரிவித்தார். கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கூறிய ஓ.பி.ராவத், தேர்தல் நடத்தை விதி காவிரி வாரியம் அமைப்பதில் பொருந்தாது என்று தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில், தேர்தல் ஆணையம் தலையிடாது என்றும் ஓ,பி.ராவத் கூறினார். காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த தடையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.