சென்னையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

151

சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை டெல்லி தலைமைக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆதவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், தனது ராஜினாமாவிற்கான காரணம் குறித்து காங்கிரஸாரிடம் ஈவிகேஎஸ்.இளங்கோவன் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைவர் பதவியில் தொடர வேண்டுமென கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தொடர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று கூறினார். எனவே, ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுமாறு ஈவிகேஎஸ். இளங்கோவனிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.