ஒரே மாதத்தில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை..!

178

நடப்பாண்டில் 4-வது முறையாக மேட்டூர் அணை, முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கர்நாடக அணை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கபிணி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து ஒரு லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், கடந்த மாதம் 25-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் 16 கண் பாலம் வழியாக சுமார் 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இம்மாதம் 12 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது.

இந்தநிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியில் இருந்து 17 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், 3-வது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டியது. தற்போது அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஒரே மாதத்தில் மூன்று முறையும், நடப்பாண்டில் 4 முறையும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.