மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை அடித்தட்டு, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கும் இடஒதுக்கீட்டினை தட்டிப்பறிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

297

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை அடித்தட்டு, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கும் இடஒதுக்கீட்டினை தட்டிப்பறிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு டாஸ்மாக் கடைகள் தான் காரணம் என்று கூறினார். பூரண மதுவிலக்கினை அமல்படுத்தினால் மட்டுமே, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையும் என்று அவர் தெரிவித்தார். ஜிஎஸ்டி மசோதாவை நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்ததை மதிமுக வரவேற்பதாகவும் வைகோ கூறினார். செம்மரம் கடத்துவதாக அப்பாவி தமிழர்களை ஆந்திர அரசு கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இதனை தடுக்க மாநில அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாநிலத்தில் முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை, மீத்தேன், கெய்ல் நிறுவன குழாய் பதிப்பு உள்ளிட்ட தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சினைகளுக்காக மதிமுக மட்டுமே தொடர்ந்து போராடி வருவதாக வைகோ தெரிவித்துள்ளார்.