குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்வு அத்வானியை ஆதரிக்க தயார் : மம்தா பானர்ஜி தகவல்

195

பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்தால் ஆதரிக்க தயார் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 13வது குடியரசுத்தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத்தலைவரை தேர்வு செய்வது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் வரும் 29 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்தால் ஆதரிக்க தயார் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத்தலைவர் வேட்பாளராக அத்வானி அறிவிக்கபட்டால் தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறினார். இதேபோன்று, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தாம் வரவேற்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.