மாலத்தீவில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றால், அந்நாட்டின் மீது படையெடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியது அவரது சொந்தக் கருத்து என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவில் அதிபர் தேர்தல் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது அதிபராக உள்ள அப்துல்லா யாமீனின் கட்சி தேர்தலில் முறைகேடுகளை செய்ய வாய்ப்பிருப்பதாக, மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நசீத் கூறியதாக, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, தமது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மாலத்தீவில் தேர்தல் முறைகேடு நடைபெறுவதை அண்டை நாடான இந்திய அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படி நடைபெற்றால் இந்தியா அந்நாட்டின் மீது படையெடுக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறியிருந்தார்.

இந்த ட்விட்டர் வாசகத்தை மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நசீத்தும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி கூறியது அவரது சொந்தக் கருத்து என்றும், அதற்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.