ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைப்பது குறித்து சசிகலா தான் முடிவு செய்யமுடியும் : மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

398

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான் முடிவு செய்ய முடியும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு என்ற தலைப்பில் தெற்காசிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திட்டங்களை வரும் நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசு அமல்படுத்தும் என்று தெரிவித்தார். சட்டசபையை முடக்கும் வகையில் திமுக செயல்பட்டதாக கூறிய அவர், அவர்களுடன் பன்னீர் செல்வம் அணியினரும் இணைந்து செயல்பட்டதாக தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறிய தம்பித்துரை, அவரை கட்சியில் சேர்த்து கொள்வது குறித்து சசிகலாதான் முடிவு செய்ய முடியும் என்றும் அவர் என்ன முடிவு செய்கிறாரோ அதை ஏற்றுக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.