மற்ற கட்சிகள் வரலாம் போகலாம் மக்கள் நலக் கூட்டணியில் 4 கட்சிகளே நிரந்தரம்! வைகோ பேச்சு!!

192

மக்கள் நலக்கூட்டணியில் நான்கு கட்சிகள் நிந்தரமாக கூட்டணியில் இருக்கும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று ம.தி.மு.க. கட்சியின் சார்பாக ரமலான் முன்னிட்டு இப்தார் நோன்பு நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன், முத்தரசன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:–
தேர்தல் நேரத்தில் பல கட்சிகள் கூட்டணிக்கு வரலாம், போகலாம் ஆனால் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளும் எப்போது கூட்டணியில் இருக்கும்.
மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இப்தார் நோன்பு 23–வது முறையாக இந்த ஆண்டு நடைபெறுகிறது. நான் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த போதும் நோன்பினை கடைபிடித்தேன். அரசியல் பேசுவதற்கு நான் இங்கு வரவில்லை. நோன்பினை சிறப்பாக கொண்டாடவே வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜி.கே.வாசன் கூறியதாவது:–
ம.தி.மு.க. சார்பாக நடக்கும் இந்த இப்தார் நோன்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின் பாலமாக இருக்கக்கூடியவர் வைகோ.
இந்த நாட்டினை ஆள்பவர்கள் எதையும் சாராமல் பொது வானவர்களாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாது.
மதத்திற்கு எதிராக எந்த ஒரு மத்திய, மாநில அரசுகளும் செயல்படக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மை மக்களுக்கு சலுகைகளையும், பாதுகாப்பையும் கொடுக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு 100 சதவீதம் நலன்கள் போய்சேர வேண்டும்.
சிறுபான்மை மக்களை ஒதுக்கிவிட்டு நாட்டை ஒரு காலமும் முன்னேற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றும் நிகழ்ச்சியில் இப்தார் நோன்பு ஒருங்கிணைப்பாளர் முராத்புகாரி கலந்து கொண்டார்.