மகதாயி நதிநீர் தொடர்பாக கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம். தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

241

கர்நாடகாவில் நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டம் காரணமாக தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கோவா மாநிலத்தில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கும் மகதாயி நதியிலிருந்து ஏழு டிம்சி தண்ணீரை குடிநீர் தேவைக்காக பயன்படுத்தக்கோரி கர்நாடகா அரசு நடுவர் நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மகதாயி அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக்கூறி முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அம்மாநில அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தன. அதன்படி கர்நாடகா முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடகா திரையுலகம் ஆதரவு கொடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.