மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேஷ்வர் திருக்கல்யாண நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர்.

1087

மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேஷ்வர் திருக்கல்யாண நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 29 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதற்காக மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் அனைத்தும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஷ்வர் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. வடக்கு ஆடி வீதியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மீனாட்சி சுந்தரேஷ்வர் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை எட்டே முக்கால் மணிக்கு மங்கள இசை முழங்க சுந்தரேஸ்வரர் – மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அப்போது, அங்கு கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி அணிந்து பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கட்டிய கயிறு, குங்கும டப்பா போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சித்திரை வீதிகளில் பக்தர்கள் வசதிக்காக மேற்கூரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
சித்திரைத்திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். விழாவின் மற்றொரு சிறப்பு நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.