ஆபாச படங்கள் பதிவேற்றம் : பேஸ்புக், வாட்ஸ்-அப் நிறுவனங்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

129

ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்-அப் நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி, விருதுநகரை சேர்ந்த கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற பெண் நீதிபதி தலைமையில் அனைத்து பெண்கள் பாதுகாப்பு குழு ஏற்படுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், அவர்களுக்கு மறுவாழ்வு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வகையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைத்தளங்களில் தவறான புகைப்படங்கள், ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களையும், இணையதளத்தில் உள்ள தவறான முகவரிகளை கண்டறிந்து நீக்கவும் புதிய மென்பொருளை கண்டுபிடித்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக, தமிழக அரசின் சமூகநலத்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், பேஸ்புக், வாட்ஸ்-அப் நிறுவனங்களின் தென்னிந்திய மண்டல நிர்வாகிகள் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.