மதுரை தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

135

மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தலைத் தள்ளி வைக்கக் கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவை நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 18அன்று மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் அந்தத் தொகுதியில் தேர்தலைத் தள்ளி வைக்கக் கோரிப் பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார். இதேபோல் பெரிய வியாழனையொட்டிக் கிறித்தவப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி ஒரு வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்றும், மதுரை தொகுதியில் வாக்குப்பதிவை இரவு 8மணி வரை நீட்டிப்பதாகவும் கூறியிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதம் சார்ந்த வழிபாடுகள் எப்படி ஒவ்வொருவருக்கும் கடமையாக உள்ளதோ, அதேபோன்று தான் தேர்தலில் வாக்களிப்பதையும் கடமையாகக் கருத வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர். இன்று வழங்கிய தீர்ப்பில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுக்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறி, தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிய 3 மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.