மதுரை தேர்தல் தேதி மாறுமா? – இன்று தீர்ப்பு

179

சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

மதுரையில் சித்திரைத் திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரி பார்த்தசாரதி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், மதுரையில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ள தேர்தல் ஆணையம், மதுரை மக்களின் வசதிக்காக இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று பதில் அளித்துள்ளது.

இதனையடுத்து, மதம் சார்ந்த வழிபாடுகள் எப்படி ஒவ்வொருவருக்கும் கடமையாக உள்ளதோ, அதேபோன்று தான் தேர்தலில் வாக்களிப்பதையும் கடமையாகக் கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, விசாரணையை ஒத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.