தமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

176

தமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரித் தொடுக்கப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் தலைமைப் பொறியாளர் ஆறுமுகம் ஆஜராகிப் பதில்மனு தாக்கல் செய்தார். அதில் சென்னைக்குக் குடிநீர்வழங்கும் ஏரிகள் வறண்டதால் குடிநீரின் அறவைக் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் குறித்தும் அதில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்துத் தண்ணீர்ப் பிரச்சனைக்குத் தீர்வுகாண என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் வினவினர். மழைக்காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைச் சேமிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எனவும் அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். நீர்மேலாண்மைக்குத் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளைத் தூர்வாரவும், எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவிப்பு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.