உயிரை கொடுத்தாவது ஆர்.கே.நகரில் மதுசூதனை வெற்றி பெற செய்யவேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள் ..!

466

உயிரை கொடுத்தாவது ஆர்.கே.நகரில் மதுசூதனை வெற்றி பெற செய்யவேண்டும் என அதிமுகவினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் தண்டையார் பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, பேசிய முதலமைச்சர், முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தால் யாருடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்படாது என நடிகர் விஷாலுக்கு பதிலடி கொடுத்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நாட்டு மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாக கூறினார். பல சோதனைகளை கடந்து வலுவான இயக்கமாக அதிமுக திகழ்வதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, உயிரை கொடுத்தாவது அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வெற்றி பெற செய்யவேண்டும் என கட்சியினரை கேட்டுக்கொண்டார்.
இதேபோன்று, முதலமைச்சரின் கருத்தை வலியுறுத்தி பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுகவினர் அனைவருக்கும் சத்ய சோதனை போன்றது என கூறினார். மதுசூதனனை வரலாற்று வெற்றி பெற செய்யவேண்டும் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.