மூடப்பட்ட 500 மதுக்கடை ஊழியர்களுக்கு மீண்டும் வேலை! 90 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டது!!

204

மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக மூடப்பட்ட ௫௦௦ மதுக்கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டது. ௯௦ சதவீதம் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். அதன்படி அவர் முதலமைச்சரானதும் முதல்கட்டமாக 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அந்த கடைகள் மூடப்பட்டன. அந்த கடைகளில் வேலை பார்த்த ஊழியர்களில் 90 சதவீதம் பேருக்கு வேலை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பணியில் அமர்த்தப்பட்டனர்

மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களுடைய சொந்த மாவட்டத்திலேயே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலர் அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சற்று தொலைவில் உள்ள வேறு மதுக்கடைகளுக்கு மாற்றப்பட்டனர். ஒரு சில ஊழியர்கள் வேற்று மாவட்டங்களுக்கும் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த ஊழியர்களை பொறுத்த வரையில் வருங்காலத்தில் இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ௨–வது கட்டமாக மதுக்கடைகள் மூடப்படும் போது காலி பணியிடங்கள்  இருக்க வாய்ப்பில்லை. அப்படி கடைகள் மூடப்படும் போது அதில் பணியாற்றி வரும் ஊழியர்களின் கதி என்ன? அவர்களுக்கு எந்தவிதமான பணி வழங்கப்படும் என்று ஒரு சில ஊழியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

10 சதவீதம் பேர் காத்திருப்பு

தற்போது மூடப்பட்டுள்ள 500 மதுக்கடைகளில் பணிபுரிந்த ௯௦ சதவீதம் பேருக்கு பணிகள் வழங்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள ௧௦ சதவீதம் பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். எந்த இடத்தில் காலி இடம் ஏற்படுகிறதோ அந்த இடத்திற்கு இவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். விடுப்பில் ஊழியர்கள் சென்றாலோ அல்லது பணியிலிருந்து சிலர் விடுபட்டாலோ அந்த இடத்துக்கும் இவர்கள் அனுப்பப்படுவார்கள் என்று டாஸ்மாக் அதிகாரி தெரிவிக்கின்றார்.

2–வது கட்டமாக இன்னும் 2 மாதத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் போது 2,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இவர்களில் பெரும்பாலானவர்கள் மூத்த ஊழியர்கள். ௫ ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்கள். மேலும் மதுக்கடைகள் மூடப்படும் போது இவர்கள் கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை என பெயர் தெரிவிக்க விரும்பாத மதுக்கடை ஊழியர் ஒருவர் கூறினார்.

பட்டதாரி ஊழியர்கள்

சென்னையில் உள்ள மதுக்கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கூறும் போது, மதுக்கடைகளில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள். இவர்கள் பணி இழக்கும் போது அவர்கள் தகுதிக்கேற்ப மாற்றுப்பணி வழங்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றார்.

சென்னையில் ஒரு சில இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டாலும் சில்லறை விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம் போல் மதுக்கடைகளில் வியாபாரம் நடக்கிறது என்று விற்பனை மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.