புதிய மதுபானக்கடைகளுக்கு எதிர்ப்பு | பெண்கள், பொதுமக்கள் போராட்டம் !

317

பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானக்கடைகளை அகற்றக்கோரி பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர், பொங்குபாளையம், ஈட்டிவீரம்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானக்கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுபானக்கடைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம் பாண்டியூர் அருகே புதிய மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளதால், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ராமநாதபுரம் – பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே இரணியல்கோணம் பகுதியில், திறக்கப்பட்டுள்ள புதிய மதுபானக்கடையை அகற்றக்கோரி இரணியல்கோணம், மேல்பாறை, கீழமணியன்குழி, இரணியல் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுபானக்கடையால் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இரவு முழுவதும் போராட்டம் நடத்தி வந்தநிலையில், அதிரடிப்படை போலீசார் எட்டுபேரை கைது செய்தனர்.