மாணவன் முதுகில் அமர்ந்து பாடம் நடத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவரது தாயார் புகார் மனு அளித்துள்ளார்.

275

மாணவன் முதுகில் அமர்ந்து பாடம் நடத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவரது தாயார் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீண்குமார். இவர் அங்குள்ள கெம்பநாய்க்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சக மாணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் மாரப்பன், பிரவீண்குமாரை அடித்ததோடு, மாணவனை வகுப்பில் குனியவைத்து அவன் மீது அமர்ந்து 40 நிமிடங்கள் வகுப்பு நடத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது தாயார் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்ததை அடுத்து, ஆத்திரமடைந்த தமிழ் ஆசிரியர் அந்த மாணவனை திட்டியுள்ளார். மேலும் அந்த மாணவனை தொடர்ந்து படிப்பதற்கு இடையூறு செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரவீண் தாயார், மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது மகன் இடையூறின்றி படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளித்துள்ளார்.