5-வது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம்..!

263

5வது நாளாக லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்வதால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர வேண்டும், சுங்க கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. சென்னை போன்ற பெருநகரங்களில் தக்காளி, வெங்காயம், காய்கறிகள் உள்ளிட்டவைகள் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். லாரிகள் தொடர் வேலை நிறுத்தத்தால், கரூரில் அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் தொழில் முடங்கியுள்ளது. 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தயாரிக்கப்படும் அட்டைப் பெட்டிகள், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனிடையே, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சண்முகப்பா தருமபுரி அருகே தொப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். டீசல், பெட்ரோல் விலைகளை உயர்த்தி, அந்த தொகையை சாலை அமைத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சாலையை எதிர்க்கவில்லை, சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை எதிர்ப்பதாக சண்முகப்பா குறிப்பிட்டார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.