வரும் 8-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் ஓடாது.

178

வரும் 8-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் ஓடாது என தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும். பழைய வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 6 மாநிலங்களில் மார்ச் 30-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தீர்வு எட்டப்படாத காரணத்தால் இந்த போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய அளவில் இந்த போராட்டத்தை கொண்டு செல்ல இருப்பதாகவும், வரும் 8-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் ஓடாது எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
தென் மாநிலங்களில் 30 லட்சம் சரக்கு வாகனங்கள் இயங்காத காரணத்தால், கடந்த 5 நாள்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் தங்களுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.