ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதன் எதிரொலியாக, பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதற்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று ஸ்காட்லாந்து பிரதமர் நிக்கோலா ஸ்டர்ஜர்ன் தெரிவித்துள்ளார்.

340

28 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிப்பதா வேண்டாமா என்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு சமீபத்தில் பிரிட்டனில் நடத்தப்பட்டது. இதில் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என பெரும்பாலானோர் வாக்களித்தனர். இந்நிலையில், இங்கிலாந்து தலைமையிலான யுனெடெட் கிங்டம் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து சுதந்திர கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கடந்த 25-ஆம் தேதி, ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 62 சதவீதம் பேர் பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, இது குறித்து விரைவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஸ்காட்லாந்து பிரதமர் நிக்கோலா ஸ்டர்ஜர்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், பிரிட்டனில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது