அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா 3 வது முறை ஆஜர் | லண்டனில் சொத்து குவித்தது குறித்து அதிகாரிகள் விசாரணை

155

சட்டவிரோத பணபரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா இன்று மூன்றாவது முறையாக ஆஜராகியுள்ளார்.

லண்டனில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளதாகவும், அது சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கில் ராபர்ட் வதேராவை பிப்ரவரி 16ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனையடுத்து, சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ராபர்ட் வதேராவிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பிப்ரவரி 7ஆம் தேதி மீண்டும் ஆஜரான வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்பது மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை உத்தரவின்பேரில், மூன்றாவது முறையாக டெல்லி அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ராபர்ட் வதேரா ஆஜராகியுள்ளார். லண்டனில் சொத்துகள் குவித்தது தொடர்பாக, அவரிடம் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.