லண்டன் வங்கியில் ரூ.310 கோடி; ஐதராபாத் நிஜாமின் பண விவகாரம் 68 ஆண்டுகளாக ஊசலாடுகிறது! நீதிமன்ற மாதிரி தீர்ப்பால் பரபரப்பு!!

158

லண்டன் வங்கியில் இருக்கும் ஐதராபாத் நிஜாமின் சொத்து விவகாரம் 68 ஆண்டுகளாக எவ்வித முடிவும் எட்டப்படாமல் ஊசலாடுகிறது. நீதிமன்றத்தின் மாதிரி தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதாக பாகிஸ்தான் கூறியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1947–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த போது நாடு 552 சமஸ்தானங்களாக சிதறிக் கிடந்தது. இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமுயற்சியால் அனைத்து சமஸ்தானங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா தனிப்பெரும் நாடாக உருவெடுத்தது. அப்போது ஐதராபாத், திருவாங்கூர் உள்ளிட்ட சில சமஸ்தானங்கள் மட்டும் இந்தியாவுடன் இணைய மறுத்தது. மாறாக ஐதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். இந்தியாவுக்கு எதிராக தனிப்படை திரட்டினார். வல்லவாய் பட்டேல் ஆபரேஷன் போலோ என்ற ராணுவ நடவடிக்கை மூலம் ஐதராபாத்தை மீட்டு இந்தியாவுடன் இணையச் செய்தார்.
பணம் டெபாசிட்
அப்போது ஐதராபாத் நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கான் சார்பாக பாகிஸ்தான் உயர் கமிஷனர் பெயரில் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ( தற்போதைய நாட்வெஸ்ட் வங்கி) வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த பணத்தை கடந்த 68 வருடங்களாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நிஜாம் குடும்பத்தினர் உரிமை கொண்டாடி வருகின்றனர். நிஜாம் சார்பில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் தங்களுக்கு சொந்தமானது என்று பாகிஸ்தான் கூறியது. அது ஐதராபாத் அரசுக்கு சொந்தமானது.
நிஜாமின் ஒப்புதலின்றி அது திருட்டுத்தனமாக கையாடல் செய்யப்பட்டுள்ளது என்று இந்தியா கூறியது. இதற்கிடையே பூர்வீக சொத்துக்கள் தங்களுக்கானது என்று நிஜாமின் பேரன்கள் கூறினர். இந்த வழக்கு பல வருடங்களாக தொடர்ந்து லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சொத்து விவகாரத்தில் பாகிஸ்தான் சொந்தம் கொண்டாட முடியாது என்று கடந்த வருடம் இங்கிலாந்து நீதிமன்றம் கூறியதுடன், வழக்குக்காக இந்தியா மற்றும் நிஜாம் பேரன்கள் செலவழித்த தொகையை பாகிஸ்தான் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தீர்ப்பு
இதனையடுத்து இந்தியாவுக்கு இந்த வழக்கு சாதகமாக அமைந்தது என்று கருதப்பட்டது. ஆயினும் இதுபற்றிய தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான 75 பக்க மாதிரி தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளவை பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளது. எங்களுடைய ஆதாரங்கள் வலுவானது என்று பாகிஸ்தான் தரப்பு கூறியது. இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா மாதிரி தீர்ப்பை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளது.