ரூ.10 லட்சம் நன்கொடை பெற்றால் லோக்பால் வரம்புக்குள் தன்னார்வ அமைப்புகள்.

175

அரசிடம் இருந்து ரூ.1 கோடி அல்லது அதற்கும் அதிகமாக நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றை லோக்பால் வரம்புக்குள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
வெளிநாட்டு நன்கொடையை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், 2 தன்னார்வ அமைப்புகளின் உரிமத்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இந்நிலையில், தன்னார்வ அமைப்புகளை லோக்பால் வரம்புக்குள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று கூறியதாவது-
புதிய விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள், அரசு ஊழியர்களாக கருதப்படுவர். அவர்கள் மீதான முறைகேடு புகார்களுக்கு ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகள் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க முடியும்.
இதேபோல், அரசிடம் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகள் மீது முறைகேடு புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்புகள் மீது, நன்கொடை அளித்த துறை சார்ந்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.