ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா மசோதா நாளை சட்டப்பேரவையில் தாக்கல்..!

300

ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா மசோதா நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்களை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 2014ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்த சட்டம் மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இதுவரை அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிட்டது.

மேலும் வரும் 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டது. இதனால் நடப்பு கூட்டத்தொடரிலேயே சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் லோக்ஆயுக்தா மசோதா நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாளை தாக்கல் செய்யப்படும் மசோதா மீது வரும் 9ம் தேதி விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.