மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்வு..!

219

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை நெருங்குவதால், நேற்றிரவு முதல் அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், அந்த அணிகளிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 112 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 118 அடியை எட்டியது.

இதன் காரணமாக அணையில் இருந்து பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மதகு வழியாக 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.