அணையின் பாதுகாப்பை முன்கூட்டியே ஆய்வு செய்யாதது ஏன்? – ஸ்டாலின் கேள்வி

329

அணை பராமரிப்பில் அதிமுக அரசு அக்கறையின்றி செயல்படுவதாக திமுக, பாமக கட்சித்தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி முக்கொம்பு அணையின் 9 மதகுகள் உடைந்து பேராபத்து ஏற்பட்டிருப்பதாகவும், முக்கொம்பு மேலணை மதகுகள் ஒவ்வொன்றாக உடைந்து கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அணையின் பாதுகாப்பை முன்கூட்டியே ஆய்வு செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், கொள்ளிடம் பாலத்தின் தூண்களை, அரசு சீரமைக்க தவறியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாமக இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள மேலணையின் 9 மதகுகள் உடைந்ததற்கு, மணல் கொள்ளையே மறைமுக காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் உடனடி ஆபத்து எதுவுமில்லை என்பது நிம்மதியளித்தாலும், தமிழகத்தின் முக்கிய கட்டமைப்புகளை பராமரிப்பதில் அரசு தோல்வியடைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். மணல் கொள்ளையை ஊக்குவித்து மேலணை உடைந்ததற்கு மறைமுகக் காரணமாக இருந்த தமிழக முதலமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி உடனே பதவி விலக வேண்டும் எனவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.