தர்மபுரியில் இறப்பு நிவாரணத்தில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 3 பேர் கைது! லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை!!

280

தர்மபுரி, ஜூலை. 23–
தர்மபுரியில் இறப்பு நிவாரணத்தில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பங்குநத்தம்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (33). இவரது தந்தை மாணிக்கம் மார்ச் 3–ந் தேதி சாலை விபத்தில் பலியானார். விபத்தில் இறந்த மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சரின் துயர் துடைப்பு நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியை பெற முனுசாமி நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தை அணுகினார். அப்போது தாசில்தார் மில்லர் (42), ஆர்.ஐ. கவிதா (40), உதவியாளர் செந்தில் (35) ஆகியோர் நிவாரண நிதி வழங்க 10 ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத முனுசாமி தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அறிவுரையின்படி நேற்று முனுசாமி லஞ்ச பணத்தை தாசில்தாரின் உதவியாளர் செந்திலிடம் கொடுத்தார். அவர் தாசில்தார் மில்லர் மற்றும் ஆர்.ஐ. கவிதாவிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.