குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

220

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். இந்த நிலையில் நேற்று காலை முதலே குற்றாலம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு வளையத்தின் மீது தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல் துறையினர் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.