குர்மீத் ராம் ரகீம் சிங் சாமியாரின் ஆதரவாளர்கள் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய அதிகாரி பணியிடைநீக்கம்!

421

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆதரவாளர்கள் நிகழ்த்திய கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பஞ்ச்குலா நகர காவல்துறை துணை ஆணையரை பணியிடைநீக்கம் செய்து அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கற்பழிப்பு வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் நடைபெற்றது. வன்முறை சம்பவங்களில் 31 பேர் பலியாகியுள்ள நிலையில், பலர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குர்மீத் ராம் ரகீம் சிங் ரோக்தாக்கில் உள்ள சிறையில் விஐபிகள் அறையில் அடைக்கப்பட்டிருப்பதால் சிறையை சுற்றிலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் தொடர் கலவரம் காரணமாக 600க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே பஞ்ச்குலாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்தபோது பொதுமக்களுக்கு விதிமுறைகள் குறித்து முறையாக விளக்கம் அளிக்காத காவல்துறை துணை ஆணையர் அசோக்குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், அரியானாவில் செயல்பட்டு வந்த குர்மீத்தின் 2 ஆசிரமங்களுக்கு அம்மாநில அரசு சீல் வைத்துள்ளது. மேலும் கலவரம் பாதித்த பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.