குமரியில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலையில் ஒகி புயல், லட்சத்தீவை நோக்கி நகர்வதாக வானிலை மையம் தகவல்..

702

வங்கக்கடலில் உருவான ஒகி புயல், கன்னியாகுமரியில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் லட்சத்தீவை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவை நோக்கி ஒகி புயல் நகர்ந்து கொண்டிருந்தாலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், கேரளாவின் தென் பகுதியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் கனத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்திலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு கேரளாவின் தென்பகுதியிலும் மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அடுத்த 48 மணிநேரத்தில் மழையின் தீவிரம் தென் தமிழகம், கேரள பகுதிகளில் படிப்படியாக குறைந்து, அரபிக்கடலில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒகி புயல் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி லட்சத்தீவுகளை தாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.