கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்தானதையடுத்து, தோவாளை மலர் சந்தையில் பெருமளவிலான பூக்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற மலர் சந்தை. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பலவிதமாக பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தநிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று தோவாளையில் சிறப்பு மலர் சந்தை கூடியது. ஆனால் கடந்த 10 நாட்களாக வரலாறு காணாத பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரளா மாநிலம் உருக்குலைந்து போனது.

இதனால், கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் தேக்கமடைந்தன. பூக்களை வாங்க குறைந்தளவு வியாபாரிகள் வந்ததால், சந்தை களையிழந்து காணப்பட்டது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய்க்கு மேல் மலர் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கோடி ரூபாய் அளவில் கூட விற்பனையாக வில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.