24-வது முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி பதவியேற்றார்

333

மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், கர்நாடகாவின் 24-வது முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி பதவியேற்றார்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவை சேர்ந்த எடியூரப்பாவை ஆளுநர் வஜூபாய் வாலா முதலமைச்சராக பதவி பிரமானம் செய்து வைத்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலில் எடியூரப்பா ராஜினாமா செய்தார். இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த 116 எம்.எல்.ஏ-கள் ஆதரவுடன் குமாரசாமி கர்நாடகாவின் 24–வது முதலமைச்சராக இன்று பதவி ஏற்றார். அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதலமைச்சராக பதவி ஏற்கிறார். ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

விதான் சவுதாவில் பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மார்க்சிஸ்ட் பொதுசெயலாளர் சீத்தாராம் எச்சூரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.