தேன்கனிக்கோட்டை அருகே ராசிமணல் திட்டு பகுதியில், காவிரி வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 40 மாடுகளை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காவிரி கரையோரத்தில் ராசி மணல் திட்டு என்ற இடத்தில், மேய்ச்சலுக்குச் சென்ற 50-க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர், பரிசல் ஓட்டிகள் உதவியுடன், தனித்தனியாக மாடுகளை மீட்டு, கயிற்றால் கட்டி, பின்னர் பரிசல்களில் ஏற்றி, நீண்ட தூர பயணத்திற்குப்பின், பிலிகுண்டுலு கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுவரை மொத்தம் 10 மாடுகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ள நிலையில், காவிரியில் அதிகளவில் தண்ணீர் ஓடுவதால், மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தில் சிக்கியுள்ள மீதமுள்ள மாடுகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தமிழக அரசு தலையிட்டு, மாடுகளை மீட்டுத்தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.